Thursday, May 31, 2012

வாசித்தலை உயிர்மூச்சாய்....

;  இன்றிலிருந்து சரியாக 31 வருடங்களுக்கு முன் அதாவது 31.05.1981 அன்று நடந்த சம்பவம்(?) தொடர்பாக இப் பதிவை எழுதுகிறேன்.

நகரத்தில் அமைந்திருக்கும் ஒரு நூலகம் அது. குறிப்பிட்ட இன மக்கட்தொகுதியின் தனித்துவத்தையும், கலாசார பெருமைகளையும், அவர் தம் சீரிய வரலாற்றினையும் இவற்றிற்கும் மேலாகஅவர்களின் எதிர்கால இருப்பையும் 97ஆயிரம் புத்தகங்களுக்குள்ளும் ஓலைச்சுவடிகளுக்குள்ளும் நிறைத்து வைத்திருந்த நூலகம்.
 அந்நூலகத்துடன் தொடர்புடையதாக அறிவு, அனுபவம், வயது என மூன்றாலும் வேறுபட்ட
என் கற்பனை கதாபாத்திரங்கள் மூவர்...
 முதலாமவர் பத்து வயதுடைய சிறுமி நிலா.மேலே நான் குறிப்பிட்ட நூலகத்தின் சிறுவர்பகுதியில் பாடசாலைநேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் அவளைக் காணலாம்.
தாய் மடியாய் அவளைத்தாங்கி பல நீதிக்கதைகளையும், நன்னெறிகளையும் ஊட்டிய நூலகத்திற்கு அன்றும் (31.05.1981) சென்ற நிலா ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்கிறாள்.
கதையின் நீளம் காரணமாக குழந்தையால் வாசித்து முடிக்க முடியவில்லை...நாளை வாசிக்கலாம் என்ற நம்பிக்கையுடன் வீடு சென்ற நிலாவிற்கு அடுத்த நாளின் விடியல் அதாவது 01.06.1981 ம் திகதி அவளுக்கு வைத்திருந்த செய்தி என்ன?

 இனி இரண்டாமவர்
பல்கலைக்கழக புதுமுக மாணவன் சேரன்.குறிப்பிட்ட நூலகத்திலிருந்து அவனது ஊர் தொலைவில் அமைந்திருந்தது.கிட்டத்தட்ட2 மணி நேர துவிச்சக்கர வண்டிப்பயணம்.
தனது பட்டபடிப்பின் தேவைக்காகவும் பொழுது போக்குக்காகவும் மேற்சொன்ன நூலகத்தின் அங்கத்தவராகும் ஆசையுடன் காலை 9மணிக்கு புறப்படும் சேரன் 11.15 மணியளவில் நூலகத்தை அடைகிறான்.நூலகரிடம் அங்கத்தவராவதற்குப் இணைந்துகொள்ளப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டிய விண்;ணப்பப்படிவத்தைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்பும் சேரன்,விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்திசெய்த பின் தன்னுடைய கிராமசேவகரிடம்சென்று விண்ணப்பப் படிவத்தில் கையெழுத்துப் பெற்றுக்கொண்டு வீடு திரும்பும் போது நேரம் மாலை 5 மணி.கிட்டத்தட்ட ஒரு நாள் அலைந்து, திரிந்து நூலக அங்கத்தவராகும் கனவுடன் உறங்கச்சென்ற சேரனுக்கு மறுநாள் தெரிய வந்த விடயம்......????



மூன்றாமவர் ஒரு ஆசிரியரும். எழுத்தாளருமான முருகன்.குறிப்பிட்ட நூலகத்தில் 25 வருடங்களுக்கும் மேலாக அங்கத்தவராக இருக்கும் முருகன் நூலகநூல்களின் உதவியுடன் மாணவர்களுக்குத் தேவையான பல நூல்களை எழுதி வெளியிட்டு வந்துள்ளார்.தன்னுடைய புதிய முயற்சியாக இலங்கையில் தமிழர் எனும் பெயரில் ஒரு நூல் வெளியிடும் ஆவலில் நூலகத்தின் சேகரிப்பிலிருந்த ஓலைச்சுவடிகள், ஆவணங்களிலிருந்து தனக்குத் தேவையான விபரங்களைச் சேகரிக்கஆரம்பித்திருந்தார்.ஆனி மாத முதலாம் நாளின் புலர்வு(01.06.1981) அவருக்குப் புலப்படுத்தியது என்ன...?????



 வாசித்தலை மூச்சுக்காற்றாய் நேசித்த தமிழர் தலையில் இடி விழுத்திய அந்தச்செய்தி இதுதான்....

1981 வைகாசி மாத 31ம்திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவிற்குப்பின் நூலகம் எரியூட்டப்பட்டு விட்டது.
நூலகத்தில் மீந்திருப்பது சாம்பலும் கருமை படிந்த சுவர்களும் மட்டுமே...
மேலே குறிப்பிடப்பட்ட மூவராய் அல்லது மூவரில் ஒருவராயேனும் ஒரு நிமிடம் ஒரேயொரு நிமிடம் வாழ்ந்து பாருங்கள்....

யாழ் நூலகம் - வரலாற்றிலிருந்து....


1842 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் முதல் நூலகம் உருவாக்கப்பட்டது.ஆனால் அந்நூலகம் பெரிய அளவில் வளர்ச்சி அடையவில்லை..


1934ஆம் ஆண்டு ஆனி மாதம் 9ஆம் திகதி ஐசாக் தம்பையா அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றே பொது நூலகத்தின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. இக்கூட்டக் காரியதரிசி திரு. க. மு. செல்லப்பா அவர்கள்; திரட்டிய 184 ரூபா 22சதம் தான் பொது நூலகம் அமைப்பதற்கான மூலதனமாய் அமைந்தது.



1934 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 1ஆம் திகதி ஆஸ்பத்திரி வீதியில் வாடகை அறை ஒன்றில் 844 நூல்களுடனும் 36 பருவ வெளியீடுகளுடனும் சிறியதொரு பொது நூலகம்
ஆரம்பிக்கப்பட்டது.
1-1-1935 இல் போதிய வசதியின்மை காரணமாக வாடி வீட்டிற்குத் தெற்கிலுள்ள மேல் மாடிக்கு இடமாற்றஞ் செய்யப்பட்டு, அங்கே இயங்கி வந்தது.


1952ஆம் ஆண்டு ஆனி மாதம் 14ஆம் திகதி சாம் ஏ. சபாபதி அவர்களின் தலைமையில், நடைபெற்ற ஒரு மகாநாட்டினை அடுத்து சகல வசதிகளையும் கொண்ட நவீன பொது நூலகக் கட்டிடம் ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.


1953ஆம் ஆண்டு பங்குனி மாதம் 29ஆம் திகதி கட்டிட அடிக்கல்நாட்டு விழா நடைபெற்றது.


11.10.59இல் பொது நூலகத்தின் முதற்கட்டம் பூர்த்தி செய்யப்பட்டு; அதி விமரிசையாக யாழ் முதல்வர் அ.த.துரையப்பா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நூலகத்தின் ஏனைய கட்டடங்களும் பூர்த்தி செய்யப்பட்டன. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூல்கள் வந்துசேர்ந்தன. புத்தக ஆர்வலர்கள் சேமித்துவைத்திருந்த புத்தகங்களும் பத்திரிகைப் பிரதிகளும் யாழ் நூலகத்துக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டன.


1981.05.31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை புத்தகக் கடைகள,இலங்கையில் முதல் தமிழ்ப் பத்திரிகை என்ற பெருமைக்குரிய ஈழநாடு பத்திரிகை அலுவலகம், யாழ்ப்பாணம் நாச்சியார் கோயில்,நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீடு  இறுதியில்; திராவிடக்கலையம்சம் பொருந்திய மொத்தம் 15,910 சதுர அடிகளைக் கொண்ட யாழ் பொது நூலகம் கிடைத்தற்கரிய மீளப்பெற முடியாத 97ஆயிரம் புத்தகங்களையும் மருத்துவ சோதிட ஓலைச்சுவடிகளையும் கொண்டிருந்த தென்னாசியாவின் முதல்தரமானதும், மிகப்பெரியதுமான யாழ்நூலகமும் காடையர்களின் தீக்கிரையாகித் தீய்ந்து போனது. நூலகம் எரிந்துகொண்டிருக்கும் செய்தி மாநகரசபை ஆணையாளர் சிவஞானத்துக்குக் கிடைத்தது. பதறித் துடித்த அவர், உடனடியாக தீயணைப்பு வீரர்களையும் மாநகரசபை ஊழியர்களையும் நூலகத்துக்கு அனுப்பினார். தீயை அணையுங்கள், ஆவணங்க்ளைக் காப்பாற்றுங்கள் என்று உத்தரவிட்டார். அதன்படி நூலகத்தை நெருங்கிய தீயணைப்பு வீரர்களைத் தடுத்து நிறுத்தி அடித்துவிரட்டியது மதிகெட்ட காடைக்கூட்டம்....
கலாநிதி ஆனந்த குமாரசுவாமி நூற்தொகுதி, சி. வன்னியசிங்கம் நூற்தொகுதி, ஐசாக் தம்பையா நூற்தொகுதி, கதிரவேற்பிள்ளை நூற்தொகுதி, அமெரிக்காவில் இருந்து நன்கொடையாக வந்திருந்த நூற்தொகுதிகள் ஆகியன அழிந்து போன பொக்கிசங்களில் அதிமுக்கியமானவை.


 

அழுகை,ஆற்றாமை, ஆவேசம், விரக்தி இப்படி ஏதோ ஒன்றின் ஆளுகைக்குள் தானே அப்போது வாழ்ந்த மக்கள் இருந்திருப்பார்கள்.


ஆனால்.....


பேரறிஞனும்,பன்மொழிப்புலவனும், ஆய்வாளனுமாகிய வணக்கத்திற்குரிய சங்.பிதா கலாநிதி டேவிட் அவர்கள் (தாவீது அடிகளார்); நூலகம் எரிந்த செய்தியைத்தாங்கிக் கொள்ள முடியாதவராய் தம்முயிரை நீத்தார்.


நூலக ஊழியரும், நாடக கலைஞருமான பற்குணம் என்பவர் 3 நாட்களாக மனநிலை குழம்பிய நிலையில் இருந்தார்





 வழமையாக நான் செல்லும் நூலகம் நூற்றில் ஒரு வாய்ப்பாக எப்பொழுதாவது மூடியிருக்கும் போது சாத்தப்பட்ட அந்தக்கதவுகள் என் மனதில் ஏற்படுத்தும் வெறுமையை நினைத்துப் பார்க்கிறேன்......
மூடிய கதவு நாளையோ மறு நாளோ திறக்கும்.. ஆனால் எரிந்து போனால்......



இப்போது போன்று இணைய வசதி இல்லாத அந்தக் காலத்தில் அறிவு விருத்திக்கான புத்தகங்களைத்தேடி அப்போதிருந்த மாணவர்கள், ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் எவ்வளவு அலைந்திருப்பார்கள்???
இத்தனைக்கும் மேலாக இவ் வெறியாட்டத்தை நிகழ்த்த ஆணையிட்ட அதிகாரவர்க்கத்திற்கும், நிகழக்கூடாத கொடூரத்தை நிகழ்த்தி முடித்த அடிவருடிகளுக்கும் கிடைத்த தண்டனை பரிசுகளும் பதவி உயர்வுகளுமே....



யாழ்ப்பாண நூல் நிலையம் - ஒரு சாட்சியம்
அந்த விசாலமான மண்டபத்தின் தரை முழுவதுமே சாந்தும் சாம்பலுமின்றி, வேறெதுவும் காணப்படவில்லை. ஓர் இடுகாட்டின் மேல் நிற்பது போன்ற உணர்ச்சி மேலிட்டது.


'எமக்கு ஏன் இந்தக் கொடுமையைச் செய்தார்கள்?' கலங்கிய கண்களோடு என் முன் நின்ற யாழ் பொது நூலகர் திருமதி ஆர். நடராஜா விடுத்த உருக்கமான கேள்வி இது.


நாட்டின் அனைத்துத் திசைகளில் இருந்தும், ஏன், உலக நாடுகள் எங்ஙனுமிருந்தும், ஆயிரமாயிரம் நல்லிதயங்களிலிருந்து எழும் கேள்வியும் இதுவே.


யாழ்ப்பாணப் பொதுநூலகத்தின் இரவல் வழங்கும் பகுதியின் நடுவே வெறுமையின் கோரத்தில் சிந்தையைச் செலுத்தியவனாக நிற்கிறேன் நான்.


முன்னர் எத்தனையோ தடவைகளில் என் சிந்தைக்கு விருந்தளித்த அந்த அறிவுக் களஞ்சியம், சிதைத்த சூன்யமாகி விட்டிருந்தது. இதயமற்றோர் கடந்த ஜூன் மாதம் முதல் நாளிரவு மூட்டிய தீயினால்!


இத்தகு அழிவுகளைப்பற்றி வரலாற்று ஏடுகளிலே வாசித்திருக்கிறேன். ஆனால் வாழ்க்கையில் கண்டதில்லை. பண்டைய எகிப்தில் உலகப் புகழார்ந்த அலெக்ஸாந்திரியா நூலகம் தீக்கிரையாக்கப்பட்டதை நினைத்தேன் ஒரு கணம். எமது நாட்டிலும் பதின்மூன்றாம், பதினாறாம் நூற்றாண்டுகளில் பொலனறுவை, கண்டி ஆகிய நகர்களில் அழிக்கப்பட்ட நூலகங்களும் என் எண்ணத்தைத் தொட்டன.


ஊனமுற்ற சுவர்களிலே பயங்கரமான புண்களைப் போல் காட்சியளித்த ஜன்னல்களின் இடைவெளியினூடாக அவ்வேளை திடுமென வீசிய காற்று, என்னை நூலகர் வழங்கிக் கொண்டிருந்த விளக்கத்திற்கு மீட்டு வந்தது. அத்தோடு முற்றாய்க் கரிந்து போன நூல்களின் சாம்பலை அக்காற்று எம் உடம்பின் மீதும் தூவிச் சென்றது......


இப்படியே நீன்டு செல்லும் இச்சாட்சியத்தை 19-7-1981 ஆம் ஆண்டு வீரகேசரியில் எழுதியவர் எஸ். எம். கமாலுதீன் அவர்கள். பின்னர் இக்கட்டுரை மூதறிஞர் க. சி. குலரத்தினம் அவர்களின் யாழ்ப்பாண நூல் நிலையம் - ஓர் ஆவணம் (1997) என்ற நூலில் பின்னிணைப்பாக சேர்க்கப்பட்டது.





ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது.
                                  -விவேகானந்தர்


'மனிதரெல்லாம் அன்பு நெறி காண்பதற்கும், மனோபாவம் வானைப்போல் விரிவடைந்து
தனிமனித தத்துவமாம் இருளைப்போக்கி, சகமக்கள் ஒன்றென்ப துணர்வதற்கும்,
இனிதினிதாய் எழுந்த உயர் எண்ணமெல்லாம் இலகுவது புலவர் தரு சுவடிச் சாலை,
புனித முற்று மக்கள் புதுவாழ்வு வேண்டில், புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்.'
                                               -பாரதிதாசன்



சரித்திரம் எரிந்து
இந்த 31ம் திகதியுடன்
31 ஆண்டுகள் நிறைவு


இதயம் இடம்பெயர்ந்து
இமயம் குடிவந்தது போல்
கனக்கிறது நெஞ்சம்....
வாசித்தலை உயிர்மூச்சாய்
நேசித்ததற்கு கிடைத்த தண்டனையோ??


இப்படி
விடைகள் இல்லா வினாக்கள்
ஓராயிரம்...நம்மிடம்..


இன்று கட்டிடத்தின் அளவால் மட்டும் பெரிதாய் யாழ்ப்பாண நூல் நிலையம....






; யாழ் நூலக எரிப்பு தொடர்பாக இணையத்தில 'burning memories of jaffna library' என தேடினால் அது தொடர்பான காணொளிகளைக் காணலாம்.

யாழின்சாரல் சாருகா

2 comments:

  1. அருமையான பதிவு சகோ... வலி உணரச்செய்தது...

    //இன்று கட்டிடத்தின் அளவால் மட்டும் பெரிதாய் யாழ்ப்பாண நூல் நிலையம....// - உண்மைகள் கசக்கவே செய்கின்றன

    ReplyDelete
    Replies
    1. //அருமையான பதிவு சகோ... வலி உணரச்செய்தது.//

      நன்றி சகோதரரே....

      Delete