Thursday, July 12, 2012

தோல்வியில் ஒரு காதல்

தோல்வி வலி தரும் வார்த்தை.ஆனால் அது திடமான உளவலிமையையும் தரும்.
தோல்வியின் பின்னரான பொழுதுகள் சிக்கலானவையாயினும் தெளிவான உறுதியான முடிவுகளை நோக்கிய பயணத்தின் சிறப்பான வழிகாட்டியாகவும் தோல்வி அமையும்.
எப்பொழுதெனில் தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளவும் தோல்வியைக்கையாளவும் தெரிந்திருந்தால்......


தோல்வி பற்றிய நினைவோ, பயமோ வேண்டாம் என்று ஒரு சாராரும் வெற்றி தோல்வியை சமமாகவே மதிக்க  வேண்டும் என்று ஒரு சாராரும் கூறுவர்
என்னைக்கேட்டால் வெற்றியை விட தோல்வி ஒருபடி உயர்ந்ததே:
தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளவும் தோல்வியைக்கையாளவும் தெரிந்திருந்தால்......


ஏன் தோற்றேன்?, என்னுடைய பலவீனம் என்ன?, இந்தத்தோல்வியிலிருந்து மீள வழி என்ன? இப்படியான கேள்விகளை தங்களுக்குள்ளேயே கேட்டு அதற்கான விடையைத்தேடுவதுனூடாக சுயஆராய்ச்சி செய்யும் சந்தர்ப்பத்தை தோல்வியானது  தோற்றவனுக்கு வழங்குகின்ற அதேவேளை, வெற்றி தோல்வியில் பங்களிக்கும் புறக்காரணிகளையும் தோல்வி அடையாளம் காட்டி நிற்கிறது....

தோல்விக்கு பின்னரான பொழுதுகள் விமர்சனங்கள், ஏளனங்கள், பரிதாபங்கள் போன்றவற்றை எதிர்கொள்வதிலேயே கழியும். விமர்சனங்கள் நம்மை வளப்படுத்தும் அதேவேளை ஏளனங்கள் தன்மானஉணர்வைத் தூண்டி விடுகின்றன.தன்னைத்தானே செதுக்கிக்கொள்ள தோல்வி எனும் வலி தரும் உளி அவசியமாகின்றது..


ஏதோவொரு சரிவின்போது தான் நமக்கு கைகொடுப்போர் யார், நம்முடைய சரிவில் கைகொட்டிச்சிரிப்போர் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்...முகமூடி அணியும் இவ்வுலக மக்களைப்பற்றிய புரிதலையும் தெளிதலையும் தோல்வி தருகிறது.

வெற்றிகள் நம்மை உலகுக்குத்தெரியப்படுத்தும் அதேவேளை இவ்வுலகத்தைப்பற்றி தோல்வி நமக்கு அறியச்செய்கிறது...நம்மை உலகம் அறிவதற்கு முன் நாம் உலகத்தைப்பற்றி தெரிந்திருத்தல் என்பது சிறப்பானதே...


தோல்வியின் பாடங்கள்  எதிர்காலத்தில் நம்மைச்சூழவுள்ளோரினை சரியாக கணிப்பதிலும் கைகொடுக்கும் அதேவேளை, அடுத்தவர் நிலையில் நம்முடைய செயற்பாடு எப்படி இருக்கும் என்ற புதிய கேள்விகளையும் தோற்றுவிக்கின்றது.


எதிர்கால வெற்றிகளில் மிரளாமலும் தோல்விகளில் துவளாமலும் இருக்க முன்னைய தோல்வி தந்த பட்டறிவு உதவுகிறது.

தொடர்ச்சியான வெற்றிகளிற்குப்பின்னர் ஏற்படும் எதிர்பாராத தோல்வி தீவிரமான உளப்பிரச்சினையை ஏற்படுத்தி தோல்வியிலிருந்து மீளவிடாமல் செய்கின்றது...ஆழ்ந்து பார்த்தால் இப்படியான பிரச்சினைகளுக்கான காரணம் அவர்கள் வெற்றி தங்களுக்கு மட்டுமே உரியது என்றும் தோல்வி கேவலமானது என்றும்  நினைப்பது தான்...

விழாமலேயே இருப்பதை விட விழுந்து பின் எழுந்து ஓடி வென்றவனுடைய உள்ளத்தில்  உத்வேகம், தன்னம்பிக்கை அதிகமாகவே இருக்கும்.

இந்த உலகில் பல தோல்விகளைச் சந்தித்தவர்களே அதிசயிக்கத்தக்க சாதனைகளையும் நிகழ்த்தி இருக்கிறார்கள்...


முட்டாள் என்றும், கல்விகற்பதற்கு அருகதை இல்லாதவன் என்றும்  பாடசாலையில் திட்டி வீட்டிற்கு அனுப்ப்பட்ட ஒருவனால் தான் இன்றைய உலகு ஒளி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றது... எண்ணிலடங்காத தோல்விகளைச் சந்தித்தவரும் ஆயிரத்திற்கு மேற்பட்ட விஞ்ஞானகண்டுபிடிப்புக்களுக்கு சொந்தமானவருமான அந்த ஒருவன் தோமஸ் அல்வா எடிசன்..; வெடிக்காத மின்குமிழைச்செய்யும் முயற்சியில் பதினேழாயிரம் மரங்களை பரிசோதித்து தோற்ற பின்னும் விடாமல் முயன்று தனக்குத் தேவையான லேடக்ஸ் எனும் பொருளைக் கண்டுபிடித்தார்.


இருபத்தொரு வயதில் வியாபாரத்தில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து ஆரம்பித்து மாகாணசட்டசபைத்தேர்தல், நாடாளுமன்றத்தேர்தல் ,மக்கள்மன்றத்தேர்தல் என வரிசையாகத் தோற்றபின் 52 வயதில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வென்றவர் தான் அமெரிக்கஅதிபர் அப்ரகாம் லிங்கன்

முயற்சி செய்யாமல் இருப்பதைக்காட்டிலும் முயன்று தோற்பது மேலானதே...
வீழ்ச்சிக்குப்பின்னரான எழுச்சியிலுள்ள மகிழ்ச்சியை தோல்வி தான் அறிமுகம் செய்கிறது...
தோல்வி அவமானம் அல்ல தன்மானச்சுடரை ஏற்றி வைக்கும் வெகுமானம்...




மீண்டு வர..,
மீண்டும் எழ...,
சரிவுகளின் பின்னும் சரித்திரம் படைக்க...,
வேதனைகளைச் சாதனைகளாக மாற்றியமைக்க...
சொல்லித்தரும் தோல்வி மகத்தானதே
இவன் தோற்றவன் என்றோ, இவர்கள் தோற்றவர்கள் என்றோ பிறரை குறைவாக மதிப்பிடுவது தான் கேவலமானது..

தோல்வி தொடர்பாக மேதைகள்  கூறியவை

“Failure is simply the opportunity to begin again this time more intelligently..”
Hentry ford

“My reputation grows with every failure” George Bernard Shaw

“I have not failed. I have just found 10000 ways that won’t work”                                                Thomas.A. Edison

“Every adversity, every failure, every heartache carries with it seed on an equal or greater benefit.”
Napoleon hill
“Success builds character, failure reveals it.” Dave checkett
 

தோல்வியில் ஒரு காதல் இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன் காதல் தோல்வி பற்றி ஏதோ அலம்பல் அல்லது கவிதை எனும் பெயரில் புலம்பல் என்று எண்ணியிருந்தால் இப்பொழுது ஒரு தோல்வி உங்களுக்கு....

தலைப்பை பார்த்து உள்ளடக்கம் இது தான் என்று நீங்களாகவே முடிவு செய்வது எல்லா சந்தர்ப்பங்களிலும் பொருந்தாது என்ற செய்தியை இத்தோல்வி வழங்கியிருக்கும் என்ற நம்பிக்கையுடன்....

யாழின்சாரல் சாருகா

4 comments:

  1. பிள்ளை...அம்மா தாயே,... நீங்களா இது??கருத்துக்கள் பலம்மா இருக்கு!!

    ReplyDelete
    Replies
    1. //பிள்ளை...அம்மா தாயே
      ... நீங்களா இது??//
      சாட்சாத் நானே தான்...
      //கருத்துக்கள் பலம்மா இருக்கு!!//
      நன்றிகள் கோடி....

      Delete

  2. இது தானா அது...

    ReplyDelete
    Replies
    1. //ஓ இது தானா அது...// ம் இது தான் அது...அது தான் இது

      Delete