Tuesday, July 24, 2012

நல்லூர் கந்தசுவாமி கோயில் நிகழ்ந்ததும் நிகழ்வதும்


இன்று நல்லூர்க் கொடியேற்றம்.எனவே நல்லூர்க்கோயில் தொடர்பான பதிவாக நிகழ்ந்ததும் நிகழ்வதும்

செங்கை ஆழியான் என அறியப்படும் கந்தையா குணராசாவின் நல்லைநகர் நூல் என்ற வரலாற்று ஆய்வு நூலிலிருந்து சில தகவல்கள் நிகழ்ந்தது என்பதன் கீழும்,
திருவிழாவுடன் சம்பந்தமான சில நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தமிழ் கலந்து நிகழ்வதும் என்பதன் கீழும் என ஒரே பதிவில் ஒரு வேறுபட்ட முயற்சி.....



நிகழ்ந்தது

கி.பி 948 ம் ஆண்டு - புவனேகபாகு என்ற சோழப்பிரதிநிதி அல்லது அமைச்;சரால் இப்போது நல்லூர் ஆலயம் அமைந்திருக்கும் குருக்கள் வளவு என்ற இடத்தில் முதன்முதலாக கந்தசுவாமி கோயில் கட்டப்பட்டது.

கி.பி 1450 ம் ஆண்;டு – கனகசூரியசிங்கையரியன் வடவிலங்கையை ஆண்ட வேளையில் தென்னிலங்கையில் கோட்டை அரசனாக ஆறாம் பராக்கிரமபாகு விளங்கினான்.கி.பி 1450ம் ஆண்டு தனது வளர்ப்பு மகனான சப்புமல்குமாரய (செண்பகப்பெருமாள் ) என்பவனைப் பெரும் படையுடன் அனுப்பி வடபகுதியை கைப்பற்றிக்கொண்டான். இந்தப்படையெடுப்பின் போது தலைநகராக விளங்கிய நல்லூரிலிருந்த கந்தசுவாமி கோயில் உட்பட அனைத்து மாடமாளிகைகளும் தரைமட்டமாக்கப்பட்டன.

கி.பி 1450 தொடக்கம் கி.பி 1467 வரை யாழ்ப்பாண இராச்சியத்தை சிறீ சங்கபோதி புவனேகபாகு என்ற பெயரில் ஆண்ட சப்புமல்குமாரய மீண்டும் யாழ் நகரை மீள நிர்மாணித்ததுடன் குருக்கள் வளவிலிருந்து அழிக்கப்பட்ட கோயிலை அதே இடத்தில் அமைக்காது அரண்மனை மற்றும் அரசமாளிகைகள் அமைந்திருந்த பண்டாரவளவுக்கு அருகில் கோயில் கட்டுவதற்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது..அவ்விடம் முத்திரைச்சந்தியில் இன்று கிறிஸ்தவ தேவாலயம் அமைந்துள்ள இடமாகும்.அவ்விடத்தில் நல்லூர் கந்தசுவாமி கோயில் இரண்டாவது தடவையாக  ஆகம விதிப்படி  சுற்றிலும் நெடு மதில்களுடன் யாழ்ப்பாணத்திலேயே பெரிய கோயிலாக அமைக்கப்பட்டது.

கி.பி 1478ல் கனகசூரியசிங்கையரியனின் மூத்த மகன் சிங்கைப் பரராசசேகரன் என்ற சிம்மாசனப்பெயரோடு அரசனானான்.சட்டநாதர் கோயில், வீரமாகாளி அம்மன் கோயில் போன்ற கோயில்களை அமைத்ததுடன் கந்தசுவாமி கோயிலுக்கு அண்மையில் ஏரி ஒன்றையும் அமைப்பித்து அதற்கு யமுனா நதியின் தீர்த்தத்தை கொணர்வித்து யமுனா ஏரி என்ற பெயரையும் சூட்டினான். நல்லூரில் தமிழ்ச்சங்கம் நிறுவியதும் பரராசசேகரனே...பரராசசேகரம் என்ற வைத்திய நூலும் செகராசசேகரம் என்ற சோதிடநூலும் இவனது காலத்திலேயே இயற்றறப்பட்டது...

கி.பி 1591 ல் 3 வது தடவையாக போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்திற்கு படையெடுத்தபோது தமிழர்படையும், பறங்கியர்படையும் தற்போதைய ஆலயம் அமைந்துள்ள குருக்கள்வளவில் ஒன்றையொன்று எதிர்கொண்டன.அப்போதைய காலகட்டத்தில் முஸ்லீம்கள் குருக்கள்வளவில் குடியேறிஇருந்தனர். பறங்கியர்படைக்கும் தமிழருக்கும் நிகழ்ந்த சண்டையில் சிக்கந்தர் எனப்பெயர் கொண்ட சைவர்களாலும் முஸ்லீம்களாலும் மதிக்கப்பெற்ற அச் சர்வமத யோகியார் உயிரிழக்க நேர்ந்தது.யோகியாருக்கான சமாதி ஒன்று முஸ்லீம்களால்  குருக்கள்வளவில் அமைக்கப்பட்டது.

கி.பி 1621.2.2 குருக்கள் வளவில் இருந்த ஆலயம் அழிக்கப்பட்ட பின் சிறீசங்கபோதியால் அமைக்கப்பட்ட ஆலயமும் ஒன்றரை நூற்றாண்டுகளின் பின் பிலிப் டி ஒலிவேறா என்ற போர்த்துக்கேயத்தளபதியால் முற்றாக அழித்தொழிக்கப்பட்டு அவ்விடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் அமைக்கப்பட்டது.

கி.பி 1658ம் ஆண்டு யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் வசமாகியது. ஒல்லாந்தர் தமது ஆட்சியின் இறுதிக்காலத்தில் மதரீதியான கடும்போக்கை குறைத்துக்கொண்டனர்.

கி.பி 1734ம் ஆண்டளவில் கிறிஸ்தவ தேவாலயம் அமைக்கப்பட்ட முன்பு கந்தன் கோயிலிருந்த அதே வளவில் கிருஷ்ணையர் சுப்பையர் என்ற பிராமனரால் கந்தமடாலயம் ஒன்று அமைக்கப்பட்டு வேல் ஒன்றினை வைத்து கந்தபுராணமும் படிக்கப்பட்டு வந்தது.இது மூன்றாவது தடவையாக அமைக்கப்பட்ட கோயிலாகும்...
பறங்கியரால் அழிக்கப்பட்ட ஆலயத்தை மீள அமைக்கவென நல்லூர்க்கந்தசுவாமி கோயிலின் அர்ச்சகச் சந்ததியினரான கிருஷ்ணையர் சுப்பையர் விண்ணப்பித்தபோது  ஒல்லாந்த ஆட்சியாளர்கள் முதல் கோயிலிருந்த குருக்கள் வளவிலேயே ஆலயம் அமைக்க அனுமதி வழங்கினர்.இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
ஒன்று தேவாலய வளவிலிருந்த கந்தமடாலயத்தை அகற்றுவது, மற்றையது தமது வர்த்தகத்திற்குப்போட்டியாக இருந்த முஸ்லீம்களை குருக்கள் வளவிலிருந்து அகற்றுவது...


கி.பி 1749 ம் ஆண்டு முதன்முதலாக கந்தன்ஆலயம் அமைக்கப்பட்ட அதே இடமான குருக்கள் வளவில் கிருஷ்ணையர் சுப்பையரினதும், தொன்யுவான் மாப்பாணர் என்பவரினதும் முயற்சியால் நான்காவது தடவையாக கோயில் அமைக்கப்பட்டது.காலத்திற்கு காலம் செய்யப்பட்ட மாற்றங்களைச் சுமந்த வண்ணம் நல்லூரில் இப்போதிருக்கும்; கோயில் கி.பி 1749ம் ஆண்டளவில் அமைக்கப்பட்டதே.....

நிகழ்வது

திருவிழா எண்டால் அது  நல்லூரில நடக்குறது தான்...கோயில் திருவிழாவையும் தாண்டி இன்னும் நிறைய திருவிழா  இங்க கொடியேறும்..



யாழ்ப்பாணத்தில இருக்கிற அம்மாவோ அப்பாவோ வெளிநாட்டில இருக்கிற பிள்ளையளுக்கு திருவிழாவைப் பத்தி மூண்டு மாசத்துக்கு முன்னால இருந்தே போன் அல்லது ஸ்கைப் மூலம் ஞாபகப்படுத்த தொடங்கி விடுவினம்....நல்லூரில கொடியேறுது... ஒருக்கா யாழ்ப்பாணத்திற்கு வந்திட்டுப்போவன்..பேரன் பேத்தியையும் பாக்கோணும் போல இருக்கு....இப்படியான உரையாடல் ஒருபுறம் நடக்கும்....

வெளிநாட்டுச் சனம் வருது எண்டால் அதுவரை fridge க்குள் இருந்த நெல்லிக்கிறஷ் குசினி அலுமாரிக்குள் இடம்பெயர்ந்து போக அந்தச்சோடா ,இந்தச் சோடா எல்லாம் நெல்லிக்கிறஷ் இடத்தை ஆக்கிரமித்துக்கொள்ளும்.....

 இப்ப கொஞ்சக்காலமா நல்லூர்த்திருவிழாவ வேடிக்கை பாக்குறதுக்கு எண்டு மாத்தயா, நங்கி, மல்லி,  வான் பிடிச்சு A9 றோட்டில ஒரு பனை உயரத்துக்கு புழுதி கிளப்பிக்கொண்டு வருவினம்.....

திருவிழாக்கு சாறி, அது, இது எடுக்கிறம் எண்டு பொம்பிளப்பிள்ளையள் ஒரு திருவிழா நடத்துவினம்...இந்தத்திருவிழாவில நியூ மாக்கட் ல கடை வைச்சிருக்கிறவன்  படுற பாடு தெனாலி படத்தில கமல் போல எனக்கு விசர் எண்டு சொல்லுற அளவுக்கு இருக்கும்....

இதெல்லாம் திருவிழாதொடங்குறதுக்கு முதல் நடக்கிறது...

திருவிழாதொடங்கினால்.....

8 மணி பள்ளிக்கூடத்துக்கு 8.15 க்கு போறவை கூட  6 மணிபூசைக்கு போறதுக்கு 4 மணிக்கு எழும்பி வெளிக்கிட்டு 5.45 க்கு முன் கோயில்ல நிப்பினம்...


மண்சட்டி, அலுமினியப்பாத்திரக் கடைக்காரனில இருந்து state bankers,private bankers ,share brokersவரை எல்லோரும் கோயில் வீதில தான்...

வழமையா தேர் தீர்த்தம் எண்டா நேரடி வர்ணனைகள றேடியோவில  கேக்கலாம்.....
.இப்ப 2 வருடமா கொழும்பில இருக்கிற வானொலி நிலையங்கள் நல்லூரில கலையகம் அமைச்சு நல்லூரிலிருந்து நேரடிஒலிபரப்பு செய்யிறதும் நடக்குது....


 பின்னேரம் 6 மணிக்குள்ள வீட்டுக்கு வந்திடுற பொம்பிளப் பிள்ளையள் 8, 9 மணிவரை  கோயில்ல நிக்கிறதுக்கு சந்தர்ப்பம் கிடைச்சாலும் கோயில் பிரதேசத்தை பத்து தரம் சுத்தி விட்டு சத்தமாக கதைச்சு கொண்டும்  பகிடிவிட்டுக்கொண்டும் 10, 11 மணிக்கு பிறகு வீட்ட வரும் அண்ணனையோ தம்பியையோ பாக்கும் பார்வையில் ஒரு வித எரிச்சல், பொறாமை, ஏக்கம்  மூண்டும் தெரியும்...

தேர் தீர்த்தம் எண்டால் இன்னும் சிலது நடக்கும்...

தன் கையைக் கொண்டு கைத்தொழில் செய்யும் சிலருக்கு தொழில்வாய்ப்பை வழங்கோணும் எண்டோ என்னவோ காற்றுக்கூட புக முடியாத அளவில வந்து குவியிற   சனத்துக்க, தேர்வடம் அளவுக்கு 10, 12 பவுணில தாலி, சங்கிலி போட்டுக்கொண்டு வாற எளிமையானவர்களையும் இங்க காணலாம்...


சனக்கூட்டத்துக்க சில தடிமாடுகள் இடிமாடுகளாகி .இடிக்கும் போதெல்லாம் பொம்பிளப்பிள்ளைகளின் கையில வைச்சிருக்கிற safety pin ன் மாற்றுப்பயன்பாடு என்ன எண்டு தெரிய வரும்..

முதல் முதலா வேட்டி  சாறி கட்டிக்கொண்டு  நடக்கிறவை இப்பத்தான் நடைபழகுற குழந்தை போல தத்தி தத்தி நடப்பினம்.... நடக்கத்தெரியாம கோயில் வீதியிலயே விழுந்து கும்பிடுறவையளும் இருக்கினம்.....


கந்தன் வள்ளியைக் காதலிச்சு முடிச்சதால  கோயில்ல  வைச்சு  line அடிக்க தொடங்கினவங்கள் தங்கட தெய்வீகக்காதல் எண்ட நினைப்பில திரியுறதும் நடக்கும்.....


நாத்திகம் கதைக்கிறவய கூட திருவிழாவில குடும்பத்தினரின்ர வாகனச்சாரதிகளாக காணலாம்....

வீடுகளில் பெரும்பாலும் கோயில் கொடியேற்றத்திலிருந்து 25 நாளும்  மச்சம் (அசைவம்) இல்லாமல் சைவ சமையலே நடக்கும் எண்டதால நீர்வேலி வாழைத்தோட்டக்காரர் பளை தென்னந்தோப்புக்காரர் உட்பட எல்லா விவசாயிகளுக்கும் உழைப்புக்கான பலனைக்கொடுக்கிறது இப்படிப்பட்ட கோயில் திருவிழாக்கள் தான்....

கடவுள் பக்தி என்பதைத்தாண்டி  7 மணிக்குப் பிறகு மணலில் கூட்டமாக இருந்து கதைக்கவும், பல நட்புக்களையும், உறவுகளையும் சந்தித்துக்கொள்வதற்கான சந்தர்ப்பங்களையும், பேரம் பேசி பொருட்கள் வாங்கவும்,உறவுகள் நட்புக்களுடன் சேர்ந்து ஒரே நாளில் 3தடவைக்;கு மேல் ice cream குடிக்கிறத்துக்கும் சோளம்,, பஞ்சுமிட்டாய், தேன்முறுக்கு ,கரம் சுண்டல் சுவை பாக்குறதுக்கும்  விதம்விதமான பலூன், விளையாட்டுப் பொருட்கள் வாங்கிறதுக்கும் இப்படி இன்னும் பல விதமாக  உள்ளத்தால குழந்தையாகிறதுக்கும் இயந்திரமயமாகி விட்ட இன்றைய வாழ்க்கை முறைகளில் இன்னும் மனிதனை உயிர்ப்புடன் வாழ வைத்துக் கொண்டிருப்பது நமது சமூகங்களைப் பொறுத்த அளவில்  இவ்வகையான திருவிழாக்கள் தான்....



யாழின்சாரல் சாருகா

6 comments:

  1. ஹிஹி வரலாற்றோடு தொடர்புபடுத்தி உண்மையில் நிகழ்பவற்றையும் அழகாய் படம்பிடித்து காட்டி இருக்கீங்க!சளரமான எழுத்து !

    ReplyDelete
    Replies
    1. //ஹிஹி வரலாற்றோடு தொடர்புபடுத்தி உண்மையில் நிகழ்பவற்றையும் அழகாய் படம்பிடித்து காட்டி இருக்கீங்க!சளரமான எழுத்து//நன்றி சகோதரரே....

      Delete
  2. வாழ்த்துக்கள் சகோ...

    மிக முக்கியமான வரலாற்றை மிகச் சுருக்கமாகவும் பதிவை சரனையாகவும் நகர்த்தியுள்ளீர்கள்

    ReplyDelete
    Replies
    1. //வாழ்த்துக்கள் சகோ...

      மிக முக்கியமான வரலாற்றை மிகச் சுருக்கமாகவும் பதிவை சரனையாகவும் நகர்த்தியுள்ளீர்கள்//
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் .....

      Delete
  3. வரலாறுகளை தெரிந்து கொண்டோம் ..நன்றி !!!

    ReplyDelete